தமிழ் திரைப்பட நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான மதன்பாபு(71) நேற்று காலமானார் என்ற துயரச்செய்தி வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசை அமைப்பாளராக தனது திரைத்துறையை தொடங்கிய மதன்பாபு, பின்னர் ஒரு நகைச்சுவை நடிகராக திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்தவர். அவரது அசால்டான சிரிப்பும், நேர்த்தியான நடிப்புடன் தமிழ்ச் சினிமாவில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. 1990-களில் இருந்து 2000-களில் பல ஹிட் படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்த அவர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக உடல்நலக் குறைபாடால் அவதிப்பட்டு வந்த மதன்பாபு, காலமானார். அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மதன்பாபுவின் இயற்பெயர் எஸ். கிருஷ்ணமூர்த்தி. ஆனால் திரைத்துறையில் ‘மதன்பாபு’ என்ற பெயரில் அவர் பிரபலமடைந்தார். பல்வேறு திரைப்படங்களில் தனது நடிப்புத்திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அவரது மறைவு தமிழ் சினிமா துறைக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர்கள், இயக்குநர்கள், மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவரது சிரிப்பும், வசனங்களும் என்றும் ரசிகர்களின் மனதில் நிறைந்தே இருக்கும் என்பது உறுதி.