திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஷாஜகான் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பாத்திமா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கர்ப்பிணியாக இருந்த பாத்திமா கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர் தஞ்சாவூருக்கு சென்ற நிலையில் தன் மனைவியை பலமுறை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக ஷாஜகான் சென்றார்.

ஆனால் பாத்திமா வீட்டிற்கு வர மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பாத்திமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த தகவலை கூட ஷாஜகானுக்கு கூறவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது அவருடைய பாட்டியான அமீனா (75) பேரன் இறந்த தூக்கத்தில் கதறி அழுத போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.