தமிழக நடிகர் விஜய் தலைமையில் செயல்படும் தமிழக வெற்றிக்கழகம், அதன் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை கடந்த ஜூலை 16-ம் தேதி நடைபெற்றது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மூகூர்த்தக் கால் நடும் நிகழ்வும் நடத்தப்பட்டது. மாநாட்டுக்கான அனுமதி கோரி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்திடம் கட்சி நிர்வாகிகள் மனுவும் அளித்தனர்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் புஸ்சி ஆனந்த் மீண்டும் மதுரை வந்து, மாநாடு நடைபெற உள்ள 530 ஏக்கர் பரப்பிலான இடத்தை பார்வையிட்டார். இதில் 300 ஏக்கரில் மாநாட்டும், மீதமுள்ள பகுதியில் வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. மாநாட்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேரில், பாதுகாப்பு தொடர்பாகவும் காவல்துறையுடன் ஆலோசனை நடந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் காரணத்தால், மாநாட்டு தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வாரத்தில் விநாயகர் சதுர்த்தி நடைபெறவுள்ளதால், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் சிரமமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட தேதி ஆகஸ்ட் 25-ம் தேதியில் மாநாடு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சி தரப்பில் உள்ளதாகவும், தேதி மாற்றம் குறித்து தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
