தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் குறைந்த அளவு படங்களில் நடித்துள்ள டாப்ஸி ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர்  மத்தியாஸ் போயும் என்பவரை காதலித்து வருகிறார். தங்கள் காதலை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி  நடிகை டாப்ஸி தன் காதலை வெளிப்படையாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் நடிகை டாப்ஸியிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்ஸி நானும் மத்தியாஸும் கடந்த 9 வருடங்களாக காதலித்து வருகிறோம். இவ்வளவு வருடங்கள் காதலிப்பதே பெரிய விஷயம். நாங்கள் இன்னும் திருமணத்திற்கு அவசரப்படவில்லை. என்னுடைய சமகாலத்து நடிகைகள் பலருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் நான் என்னுடைய இந்த உறவிலிருந்து விலகுவதற்கு நினைக்கவில்லை. எனக்கு சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் எந்த போட்டியும் இல்லை. மேலும் என்னுடைய காதல் குறித்து இனி நான் வெளிப்படையாக பேச விரும்பவில்லை என்று கூறினார்.