பிரபல மலையாளப் பின்னணிப் பாடகி சித்ரா ஐயரின் சகோதரி சாரதா ஐயர் (52), ஓமனில் மலையேற்றப் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சோகச் செய்தி பாடகியின் குடும்பத்தினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரேபியாவின் ‘கிராண்ட் கேன்யன்’ என்று அழைக்கப்படும் ஓமனின் ஜெபல் ஷாம்ஸ் பகுதியில் உள்ள வாடி குல் (Wadi Ghul) என்ற இடத்தில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி சாரதா ஐயர் தனது நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட “விசித்திரமான விபத்தில்” சிக்கி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் மலையேற்றத்திற்காகக் குறிக்கப்பட்ட சரியான பாதையிலேயே சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விபத்துக்கான சரியான காரணம் குறித்து ஓமன் நாட்டு அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
தனது சகோதரியின் மறைவு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பாடகி சித்ரா ஐயர், “நாங்கள் அனைவரும் மனமுடைந்து போயிருக்கிறோம். மிக வேகமாக எங்களை விட்டுச் சென்றுவிட்டாய்,” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தனது சகோதரியுடன் இருந்த நெருக்கமான பிணைப்பையும், அன்றாட உரையாடல்களையும் நினைவுகூர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
மறைந்த சாரதா ஐயர், ஓமன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் மேலாளராகப் பணியாற்றியவர். கேரளாவின் தழவாவைச் சேர்ந்த இவர், மறைந்த விவசாய விஞ்ஞானிகள் ஆர்.டி. ஐயர் மற்றும் ரோகிணி ஐயரின் மகள் ஆவார்.
கடந்த டிசம்பர் 11-ஆம் தேதிதான் இவரது தந்தை ஆர்.டி. ஐயர் காலமானார்.
தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த சாரதா, டிசம்பர் 24-ஆம் தேதிதான் மீண்டும் ஓமனுக்குத் திரும்பியுள்ளார்.
தந்தை மறைந்த சில நாட்களிலேயே மகளும் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமனில் உள்ள சாரதாவின் உடல், விமானம் மூலம் கேரளாவுக்குக் கொண்டு வரப்படுகிறது. வரும் ஜனவரி 7-ஆம் தேதி, தழவாவில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதாவின் மறைவுக்குத் திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
