ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுக்கு முன்னதாக, பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா வீதிகளில் அர்ஷ்தீப் சிங், தனது காதலி என கிசுகிசுக்கப்படும் சம்ரீன் கவுருடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ரசிகர்கள் சிலர், இந்திய வேகப்பந்து வீச்சாளரைப் பார்த்த உற்சாகத்தில் காரின் ஜன்னலை இறக்கி,  உரக்கக் கத்தினர்.

 

ரசிகர்களின் இந்த திடீர் சத்தத்தைக் கேட்டு அருகே இருந்த சம்ரீன் கவுர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால், அர்ஷ்தீப் சிங் எவ்வித பதற்றமும் இன்றி மிகவும் நிதானமாக ரசிகர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குப் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அர்ஷ்தீப் சிங்கும், நடிகை சம்ரீன் கவுரும் காதலிப்பதாக நீண்ட நாட்களாகப் பேச்சு அடிபட்டு வருகிறது. இதுவரை இருவரும் தங்களது உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், இது போன்ற பொது இடங்களுக்கு ஜோடியாக வருவதன் மூலம் தங்களது காதலை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மைதானத்தில் பந்துகளை வேகமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் அர்ஷ்தீப், மைதானத்திற்கு வெளியேயும் ரசிகர்களிடம் காட்டிய எளிமையான பண்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.