இளம் இந்திய பேட்டிங் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, டி20 கிரிக்கெட்டுடன் மட்டும் நின்றுவிடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பும்ரா, கம்மின்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, 236-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வரும் 15 வயது வைபவ், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

டி20 போட்டிகளில் அபாரமாகச் செயல்பட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே ஒரு வீரரின் மனவலிமை மற்றும் திறமையை முழுமையாகச் சோதிக்கும் என்பதால், அவர் நீண்ட தூரப் போட்டிகளிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்ஸ்களில் 440 ரன்களைக் குவித்துள்ள வைபவ், சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இருப்பினும், அவரது முதல்தர கிரிக்கெட் சராசரி தற்போது 17.25 ஆக மட்டுமே உள்ளது.

டி20 போட்டிகளில் அவர் அடைந்துள்ள அசுர வளர்ச்சி அவரை ஒரு அதிரடி ஆட்டக்காரராகக் காட்டினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சவால்களை அவர் எதிர்கொள்ளும் போது ஒரு முழுமையான வீரராக உருவெடுப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

“>

 

கடினமான பாதையாக இருந்தாலும், வைபவ் சூர்யவன்ஷி தனது நாட்டிற்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைக் காண ஆவலாக இருப்பதாக டி வில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.