சமீபகாலமாக திமுக – இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார்.

​அவர் கூறுகையில், “திமுக – இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணி இப்போதும் உறுதியாகவும், வலிமையாகவும் இருக்கிறது. நாங்கள் பின்வாசல் வழியாக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். கிரிஷ் சோடங்கர் எங்குமே வேறு கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. சில சக்திகள் திட்டமிட்டு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு உதவி செய்யும் நோக்கில் இது போன்ற சதி வேலைகளைச் செய்கின்றன. நாங்கள் இப்போது வரை திமுக-வுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று மிகத் தெளிவாகவும் காரசாரமாகவும் தெரிவித்துள்ளார்.