மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசு மருத்துவமனை பிணவறையில் ஒரு பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமை செய்த ஆண், சிசிடிவி காட்சிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி, புர்ஹான்பூர் மாவட்டம் காக்னர் சமூக சுகாதார மைய பிணவறையில் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. அன்றைய தினம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு பெண்ணின் உடலை, 25 வயதான நிலேஷ் பிலாலா என்பவர் ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து எடுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிசிடிவி காட்சிகள் உறுதி செய்துள்ளன. சம்பவம் அன்று மாலை 6.45 மணியளவில் நடந்ததாகவும், சிசிடிவி காட்சி  பதிவுகளை சமீபத்தில் ஆய்வு செய்தபோது வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில்

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் அதியா தாவர், அக்டோபர் 7ஆம் தேதி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்தனர். குற்றம் சாட்டப்பட்ட நிலேஷ் பிலாலா, புர்ஹான்பூர் அருகே உள்ள டாங்கியாபட் கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் வெளிநபர் ஒருவர் எவ்வாறு நுழைந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து  விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவியுள்ளதால், மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் கடும் கண்டனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.