பிசிசிஐ 2025-26 ஆம் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர சம்பள ஒப்பந்தப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய அணியின் மூத்த வீரர்களான முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த முறை சி பிரிவில் இருந்த இஷான் கிஷன், போதிய சர்வதேச போட்டிகளில் விளையாடாத காரணத்தால் மீண்டும் தனது ஒப்பந்தத்தை இழந்துள்ளார். அதேபோல், காயத்திலிருந்து மீண்டு வந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இந்த முறை பட்டியலில் இடம் பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் தவிர்த்து, ரஜத் படிதார், சர்பராஸ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகிய வீரர்களும் இந்த புதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மதிப்பீட்டு காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச போட்டிகளில் விளையாடாததே இவர்கள் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ‘ஏ+’பிரிவில் இருந்து ‘பி’ பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளனர். தற்போது சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே உயரிய ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.
