19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இருப்பினும், ஐசிசி-யின் வயது விதிமுறை காரணமாக அவர் உடனடியாக இந்திய அணியில் இடம்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதில் தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 80 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் உட்பட 175 ரன்களை விளாசினார். இதன் மூலம் எல்லைக்கோடுகள் வாயிலாக மட்டுமே 150 ரன்களை அவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தைப் பார்த்த கிரிஸ் ஸ்ரீகாந்த் போன்ற ஜாம்பவான்கள், அவரை உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிசிசிஐ நினைத்தாலும் தற்போது அவரைச் சேர்க்க முடியாது. அதற்கு ஐசிசி-யின் (ICC) 2020-ஆம் ஆண்டு விதிமுறை தடையாக உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் ஒரு வீரருக்கு குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது ஐசிசி-யின் கட்டாய விதியாகும்.
2011 மார்ச் 27-இல் பிறந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது 14 வயது மட்டுமே ஆகிறது. எனவே, வரும் மார்ச் மாதத்திற்குப் பிறகே அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தகுதி பெறுவார்.
நடப்பு ஐபிஎல் தொடருக்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது முடிந்துவிடும் என்பதால், மே மாதத்திற்குப் பிறகு அவர் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்படி அவர் களமிறங்கும் பட்சத்தில், மிக இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிசிசிஐ விதிகளின்படி ஒரு வீரர் ஒருமுறை மட்டுமே யு-19 உலகக்கோப்பையில் விளையாட முடியும் என்பதால், வைபவ் மீண்டும் ஜூனியர் உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
