மும்பை மாநகரின் உள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சமூக வலைத்தளமான Xதளத்தில்  பகிரப்பட்ட இந்த வீடியோ, பலரது கவனத்தையும் அக்கறையையும் ஈர்த்துள்ளது. காணொளியில், பார்வையற்ற பயணி ஒருவர், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திவ்யாங்ஜன் பெட்டியில் ஏற முயற்சிக்கிறார். ஆனால், பெட்டியின் முன் பெண் பயணிகள் அதிகமாக குவிந்திருந்ததால், அந்த நபர் நடுவே தள்ளப்படுகிறார். இதனால், அவர் ரயிலில் ஏறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்.

இந்த வீடியோவை யார் எடுத்தது, எந்த நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான முழுமையான விவரங்கள் இல்லை. இருப்பினும், இது மும்பை ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் நிஜமான துயரங்களை வெளிப்படுத்துகிறது. “நகரின் உயிர்நாடி” என அழைக்கப்படும் மும்பை உள்ளூர் ரயில்கள், தினமும் மில்லியன் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. குறிப்பாக நெரிசல் நேரங்களில், வழக்கமான பயணிகளே சிரமப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் போன்ற சூழ்நிலை அடிப்படையிலான பயணிகள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பதையும் இந்த வீடியோ முன்வைக்கிறது.

 

இந்த வீடியோவுக்கு மும்பை மத்திய ரயில்வேயின் டிவிஎம் அலுவலர் (@drmmumbaicr) பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைச் சரியாக கண்காணிப்பது, பயணிகளிடையே விழிப்புணர்வை உருவாக்குவது மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புடன் மற்றும் கண்ணியத்துடன் பயணிக்க வைப்பது போன்ற முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.