ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாகத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியைச் சந்தித்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (46) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (39) ஜோடி நல்ல தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், கொல்கத்தாவின் வருண் சக்ரவர்த்தி மற்றும் கார்த்திக் தியாகியின் அபாரமான பந்துவீச்சால் (தலா 3 விக்கெட்) ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி, ஒரு கட்டத்தில் 85 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால், அதிரடி வீரர் ரிங்கு சிங் (50*) மற்றும் அனுகுல் ராய் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கடைசி ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட ரிங்கு சிங், கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

 

தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், “இந்த ஆடுகளத்தில் 170 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். நாங்கள் இலக்கை நிர்ணயிப்பதில் கோட்டை விட்டுவிட்டோம். அதேபோல், பீல்டிங்கில் கேட்சுகளைத் தவறவிட்டது மற்றும் பந்துவீச்சில் அடிப்படைத் தவறுகளைச் செய்தது தோல்விக்கு முக்கியக் காரணம்” எனத் தெரிவித்தார்.

மேலும், சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்ததால் பிஷ்னோய் மற்றும் புஞ்சா ஆகியோரை அதிகம் பயன்படுத்தியதாகவும், எதிரணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் தாமே ஒரு ஓவரை வீசியதாகவும் அவர் விளக்கமளித்தார். தோல்விக்கு பின் ராஜஸ்தான் அணியின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி மிகுந்த சோகத்துடன் காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் தோற்றபோதிலும், புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது.