ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே வன்னி மேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் ஆண் குழந்தைகளாக பிறப்பார்கள். யாராவது புண்ணியம் செய்து இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். இதை நான் பொதுவாக தான் கூறுகிறேன். தவறான எண்ணத்தில் கூறவில்லை. இது இயல்பு.

நாம் பாசமாக இருந்தால் குடும்பம்  மட்டுமல்ல இந்த நாடே நன்றாக இருக்கும் என்று கூறினார். அமைச்சர் இந்த விஷயத்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கூறினாலும் தற்போது அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி பாவ புண்ணியம் குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது. மேலும் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மறு ஜென்மம் குறித்து திமுக அமைச்சர் ஒருவரும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.