“மிருகங்களுக்கு மிருகத் தன்மை இல்லை; சில மனிதர்கள்தான் அதைக் காட்டுகிறார்கள்” என்பதற்கான சாட்சி போல, ஜெய்ப்பூரில் நடைபெற்ற கொடூர சம்பவம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், ‘சோபி’ என்ற நாயை, வீட்டு பணிப்பெண் அடித்து துன்புறுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த நாய் தன்னை காக்க ஓடி ஓடி தவித்தாலும், பணிப்பெண் தொடர்ந்து தாக்குவதைக் காண முடிகிறது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி மூலம் இந்த சம்பவம் அம்பலமானது.

இச்சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டதும், பலரும் அதிர்ச்சி மற்றும் கோபத்துடன் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ‘Ghar Ke Kalesh’ X கணக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்தவர்களில் ஒருவர், “இந்த பெண் அதிர்ஷ்டசாலி தான்; நாய் பதிலடி கொடுத்திருந்தா, அவளது உடல் முழுவதும் காயங்களாகியிருக்கும்” என கூறியுள்ளார்.

மற்றொருவர், “இன்றைய காலத்தில் மனிதர்களைவிட அதிக கருணை மிருகங்களிடமே இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட பணிப்பெண் மீது காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வீடியோ மிருகங்களை நேசிக்கும் மக்களின் மனதில் வேதனையையும், கோபத்தையும் தூண்டியுள்ளது. “மௌனமான ஒரு உயிரினத்தையும் இப்படி துன்புறுத்துவது நீதிக்கு விரோதம்” என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இந்த பணிப்பெண்ணிடமிருந்து நாயை காப்பாற்றியதற்காக, வீட்டு உரிமையாளர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாதென்பதற்காக, சட்டமன்றத்தில் கடுமையான நடவடிக்கைகள் தேவை என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.