மத்திய கிழக்கு போரின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக, ஈரானில் இருந்து வெளியாகியுள்ள ஒரு உருக்கமான புகைப்படம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பயங்கரமான சத்தத்தைக் கேட்டே, தியாரா சடேகி என்ற 8 வயது சிறுமி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
ஈரானின் யஸ்டு மாகாணத்தில் நடந்த இந்தச் சோகத்தை “அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாத வெடிப்பு” என ஈரான் ஊடகங்கள் சாடியுள்ளன. காயங்களே இல்லாமல், வெறும் வெடிகுண்டு சத்தத்தால் ஏற்பட்ட பயத்திலேயே ஒரு பிஞ்சு உயிர் பிரிந்திருப்பது, இந்தப் போரின் கொடூரத்தை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.
இந்தப் போரின் முதல் நாளிலேயே சுமார் 175-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பிஞ்சு குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடுமையாகக் கண்டித்துள்ளது.
“அதிர்ச்சி மற்றும் பயத்தால் ஒரு சிறுமி உயிரிழந்தது மனிதநேயமற்ற செயல்” என யஸ்டு மாகாண துணை ஆளுநர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், அடுத்தடுத்து நிகழும் இத்தகைய உயிரிழப்புகள் உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
