பால் பாக்கெட்டுகளில் இருந்து பாலை ஊற்றும்போது சிந்துவது அல்லது அதைச் சரியாகப் பிரிட்ஜில் அடுக்கி வைப்பது பலருக்கும், குறிப்பாகத் தனியாக வசிக்கும் மாணவர்களுக்குப் பெரும் போராட்டமாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு கல்லூரி மாணவர் கண்டுபிடித்த விசித்திரமான தீர்வு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதாவது கல்லூரி மாணவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், பால் பாக்கெட்டுகளைக் கையாள்வதில் உள்ள சிரமங்களை நகைச்சுவையாக விவரித்துள்ளார். கத்தரிக்கோலால் பாக்கெட்டை வெட்டும்போது அது சரிந்து பால் சிந்துவது, பற்களால் பாக்கெட்டைப் பிரிப்பது போன்ற முறைகளைச் செய்து காட்டிய அவர், இவை இரண்டுமே பாதுகாப்பானவை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 

View this post on Instagram

 

A post shared by builders.mu (@builders.mu)

வெளிநாடுகளில் பால் பாக்கெட்டுகளைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேகக் கொள்கலனை (Holder) இணையத்தில் பார்த்த அந்த மாணவர், அதை இந்தியப் பால் பாக்கெட்டுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கத் திட்டமிட்டார். தனது கல்லூரி ஆய்வகத்தில் இருந்த ‘3டி பிரிண்டர்’ (3D Printer) இயந்திரத்தைப் பயன்படுத்தி, பால் பாக்கெட்டை உள்ளே செருகி எளிதாகப் பாலை ஊற்றக்கூடிய வகையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டாண்டை உருவாக்கினார்.

வீடியோவில், “இந்த ஸ்டாண்டிற்குள் பால் பாக்கெட்டைச் செருகி, அதன் மேல் பகுதியைச் சிறு துளையிட்டால் போதும்; பால் சிந்தாமல் ஊற்றலாம், பிரிட்ஜிலும் அழகாக அடுக்கி வைக்கலாம்” என்று அவர் விளக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சிலர், “இளம் வயதிலேயே இவ்வளவு ஆக்கப்பூர்வமான சிந்தனையா?” என்று பாராட்டினர்.

அதே சமயம், பலரோ, “எதற்காக இதற்கு இவ்வளவு மெனக்கெடல்? சாதாரண ஜக்குகளைப் பயன்படுத்தினாலே இந்தச் சிக்கல் தீர்ந்துவிடுமே!” என்றும், “இது ஒரு தேவையற்ற கண்டுபிடிப்பு” என்றும் கிண்டலடித்தனர். “உங்கள் வீட்டில் ஜக் இல்லையா?” என்று ஒரு பயனர் கேட்க, “இவ்வளவு தொழில்நுட்பம் தேவையா?” எனப் பலரும் கேள்வி எழுப்பினர். எது எப்படியோ, கல்லூரி வளங்களைப் பயன்படுத்தித் தனது அன்றாடப் பிரச்சனையைத் தீர்க்க முயன்ற இந்த மாணவரின் முயற்சி, இணையத்தில் தற்போதைய பேசுபொருளாகியுள்ளது.