மஹாராஷ்டிர மாநிலம் புல்டானாவில், தனது மனைவியைக் கொல்வதற்காக மூன்று முறை விஷம் கொடுத்து முயன்ற கணவன், அதில் தோல்வியடைந்த நிலையில், கூலிப்படையை ஏவி விபத்து போல நாடகமாடிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புல்டானாவைச் சேர்ந்தவர் பிரகாஷ் கவாண்டே. இவரது மனைவி விருஷாலி, ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக, விருஷாலியைத் தீர்த்துக்கட்ட பிரகாஷ் முடிவு செய்துள்ளார். இதற்காக, விருஷாலியின் உணவில் மூன்று முறை விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக விருஷாலி உயிர் தப்பினார்.
இதையடுத்து, கொலையைச் செய்து முடிக்கத் திட்டமிட்ட பிரகாஷ், மங்கேஷ் சுல்கர் என்பவரைத் தொடர்புகொண்டு, ஒரு லட்சம் ரூபாய் கூலி பேசி மனைவியைக் கொல்ல ஒப்பந்தம் செய்தார். திட்டமிட்டபடி, கடந்த மார்ச் 2-ஆம் தேதி விருஷாலி ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, மங்கேஷ் சுல்கரின் ஆளான மனிஷ் சூர்யவன்ஷி, ஒரு டாடா இன்ட்ரா (Tata Intra) காரால் விருஷாலியின் ஸ்கூட்டர் மீது மோதினார். இந்தத் தாக்குதல் எவ்வளவு பலமாக இருந்ததென்றால், விருஷாலி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை ஒரு சாதாரண சாலை விபத்து என நம்ப வைக்க அவர்கள் முயன்றனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றி வந்த அந்த வெள்ளை நிற காரை மையமாக வைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அந்தக் காரின் உரிமையாளரான மனிஷ் சூர்யவன்ஷியைப் பிடித்து விசாரணை செய்ததில், ஒட்டுமொத்த சதியும் அம்பலமானது. கணவன் பிரகாஷ் கவாண்டே கூலிப்படையினருடன் இணைந்து செய்த சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து, இந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்ட கணவன் பிரகாஷ் கவாண்டே, கூலிப்படையைச் சேர்ந்த மங்கேஷ் சுல்கர் மற்றும் கார் ஓட்டுநர் மனிஷ் சூர்யவன்ஷி ஆகிய மூவரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களுக்கு மூன்று நாள் காவல் விதிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத் தகராறே இக்கொலைக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், இது குறித்து மேலதிக விசாரணைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
