சீனாவில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனது பால்கனியில் இருந்து வெளியே பார்க்கும் காட்சி  அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, கட்டிடத்தின் முக்கியத் தாங்கு தூணையே நபர் ஒருவர் வெட்டி அகற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்டை கட்டிடத்தில் வசிக்கும் ஒருவரால் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ, எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், 20 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட குடியிருப்பு வளாகத்தின் 6-ஆவது மாடியில் உள்ள பால்கனியில் இரு தொழிலாளர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர், கட்டிடத்தின் எடையைத் தாங்கி நிற்கும் ஒரு தடிமனான கான்கிரீட் தூணைஅதிநவீனக் கருவிகள் மூலம் வெட்டி அகற்றுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. தூணின் சில பகுதிகள் ஏற்கனவே வெட்டப்பட்டு அகற்றப்பட்டிருப்பதும் அதில் தெரிகிறது. எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, பல நூறு அடி உயரத்தில் நின்றுகொண்டு அவர்கள் இந்த விபரீத வேலையைச் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளவாசிகள் மற்றும் பொறியாளர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும் அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நபர் ஈர்ப்பு விசை என்பதை ஒரு கட்டுக்கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? 20 அடுக்கு மாடிக் கட்டிடத்தை ஏதோ ‘Minecraft’ வீடியோ கேம் போல நினைத்து எடிட் செய்து கொண்டிருக்கிறார். இனிமேல் வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வீடு வாங்குவதற்கு முன்பு, அண்டை வீட்டாரின் புத்திசாலித்தனத்தை சோதித்துப் பார்ப்பது நல்லது” என்று ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், “இப்படிப்பட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தனது சுயநலத்திற்காக ஒட்டுமொத்த கட்டிடத்தின் பாதுகாப்பையும், அதில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரையும், அவர்களின் ஆயுள் கால உழைப்பையும் இவர் கேள்விக்குறியாக்கியுள்ளார்” என்று கொந்தளித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தேடல்படி, இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது என்பதும், நடப்பு 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த வீடியோ இணையத்தில் உலா வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய ஆபத்தான வேலை பகிரங்கமாகத் தூய்மைப் பணி போல நடக்கும் போது, அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளோ அல்லது மற்ற குடியிருப்புவாசிகளோ ஏன் இதனைத் தடுத்து நிறுத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகச் சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.