ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய பாலத்தை கடக்க முயன்ற பிக்கப் வாகனம் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்கோவிந்த்பூர் பகுதியில் உள்ள சன்னை பாலத்தின் மீது 3 அடிக்கும் அதிகமாக வெள்ளநீர் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து ஏற்கெனவே தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அமன்யா பகுதியைச் சேர்ந்த பிக்கப் ஓட்டுநர், ரஸ்கோவிந்த்பூரில் இருந்து அமர்தா நோக்கி செல்ல பாலத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது வெள்ளநீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே அடித்துச் செல்லப்பட்டது. வாகனம் முழுவதுமாக நீரில் மூழ்கிய நிலையில், ஓட்டுநரும் உதவியாளரும் எப்படியோ வெளியே வந்து வெள்ளநீருக்கு நடுவே சிக்கிக் கொண்டனர். உதவிக்காக காத்திருந்த அவர்களை மீட்க தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தீவிரமான நீரோட்டம் காரணமாக மீட்புப் பணி மிகவும் சவாலாக இருந்தது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, தீயணைப்புப் படையினர் படகின் உதவியுடன் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பாதுகாப்பாக மீட்டனர். இருவரும் மீட்கப்பட்டதும் அப்பகுதியில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். பாலத்தில் தொடர்ந்து 3 அடிக்கும் அதிகமாக வெள்ளநீர் செல்வதால், அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.