தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், கூட்டணி அமைப்புகளின் கணக்கீட்டில் கட்சிகள் தற்போது முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவர் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா எம்.பி., பனையூரில் உள்ள இல்லத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
அந்த சந்திப்பில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்புகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வையும் இணைவதற்கான அழைப்பை வைஜயந்த் பாண்டா விடுத்ததாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது, தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மேலும் பாமக கட்சியில் தந்தை மகன் ஊடையே மோதல் போக்கு நிலவும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
