உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் சனிக்கிழமை காலை அரங்கேறிய சினிமா பாணியிலான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதான ராஜீவ் சிங் என்ற மூத்த வழக்கறிஞர் வழக்கம்போல காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவரை வழிமறித்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். கொலை செய்த வேகத்தில் அங்கிருந்து தப்பிக்க முயன்ற கொலையாளிகளுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது; அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது.

இதனால் பதற்றமடைந்த அவர்கள் பைக்கை மீண்டும் மீண்டும் ‘கிக்’ செய்து ஸ்டார்ட் செய்ய முயன்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களைப் பிடிக்க நெருங்கியபோது, கொலையாளிகள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் அனைவரும் பின்வாங்கினர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக பைக் ஸ்டார்ட் ஆக, இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். ஏற்கனவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ராஜீவ் சிங் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது நடந்துள்ள இந்த துணிகரக் கொலை அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.