கிரிக்கெட் உலகில் எப்போதுமே எதிர்பாராத திருப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலைமை என்றால், ஒரு தோல்வி போதும், மொத்த அமைப்பையும் அது தலைகீழாக மாற்றிவிடும். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் கண்ட மோசமான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தற்போது வெடித்துள்ள அதிருப்தி அலைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தில், தோல்வியால் சோர்ந்துபோன தேசிய அணி வீரர்களுக்கும் வாரியத் தலைவருக்கும் ஒரு மதிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடத்திற்கு வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களின் கூட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை உருவாக்கியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி தனது மெர்சிடிஸ் காரில் வந்து இறங்கியதுதான் தாமதம், ஊடகவியலாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அணியின் படுதோல்வி குறித்தும், அடுத்தடுத்து அரங்கேறிவரும் அதிரடி மாற்றங்கள் குறித்தும் கேள்விகளைத் தொடுக்க முயன்றனர். ஆனால், பத்திரிகையாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல், அனைவரையும் கண்டும் காணாமல் அவர் விருந்து நடக்கும் அறைக்குள் விரைந்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் ஏற்பட்ட வரலாற்றுத் தோல்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை உலுக்கிப் போட்டது. உடனடியாக விழித்துக்கொண்ட வாரியம் அணியில் பெரும் நடவடிக்கைகளில் இறங்கியது. இமாம்-உல்-ஹக், சல்மான் அலி அகா, முகமது ரிஸ்வான் உள்ளிட்ட பல முன்னணி மூத்த வீரர்கள் உட்பட 7 பேர் அதிரடியாக அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டு சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அணியின் படுதோல்விக்குப் பொறுப்பேற்கும் விதமாக, பயிற்சி ஊழியர்களான சர்பராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோர் மாற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக வெள்ளைப் பந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களான மைக் ஹெசன் மற்றும் அஷ்லே நோப்கே ஆகியோர் டெஸ்ட் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளனர். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான அணியில் இமாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் கேட்டு தேர்வு குழுவிற்கு வாரியம் ‘ஷோ காஸ்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சூடான சூழலில், முன்னாள் கேப்டனும் தேர்வு கமிட்டி உறுப்பினருமான மிஸ்பா-உல்-ஹக் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

அனுபவமிக்க வீரர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சயிம் அயூப் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகிய குறைந்த அனுபவம் கொண்ட வீரர்களுடன், அராபத் மின்ஹாஸ், முகமது இம்ரான் ஜூனியர், சாத் பைக், முகமது இம்ரான் ரந்தாவா மற்றும் ரசாபுல்லா உள்ளிட்ட 5 முற்றிலும் புதிய இளம் வீரர்களும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளைப்பந்து தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஷ்லே நோப்கே ஆகியோரின் வழிகாட்டுதலுடன், மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேசமயம், நிர்வாகத்தின் இந்தச் சீரமைப்பு நடவடிக்கைகளும், லண்டனில் மொஹ்சின் நக்விக்குக் கிடைத்த கசப்பான வரவேற்பும் அந்நாட்டு கிரிக்கெட்டில் நிலவும் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.