சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியை முடிவு செய்வதிலும், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1977-ல் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததைப் போன்ற ஆதரவு தமக்கும் கிடைக்கும் என்று விஜய் நம்பினார்; ஆனால் ‘ஆட்சியில் பங்கு’ என அவர் விடுத்த அழைப்பைப் பிரதான கட்சிகள் எட்டிப்பார்க்கக்கூட இல்லை.
தற்போது பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் சேரலாமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என்ற இருவேறு கருத்துகளால் கட்சிக்குள் மோதல் நிலவுகிறது. இதனால், தேர்தல் நெருங்கும் வேளையில் யாருடன் கைகோர்ப்பது என்ற தெளிவில்லாமல் விஜய் தவித்து வருகிறார்.
மற்றொருபுறம், கட்சிக்குள் இருக்கும் பல்வேறு அதிகார மையங்கள் வேட்பாளர் தேர்விலும் விஜய்யைக் குழப்பி வருவதாகக் கூறப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களைப் பரிந்துரைப்பதோடு, தகுதியான வேட்பாளர்களுக்குப் பதிலாகப் பணபலம் கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் நீண்டகாலமாக உழைத்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சுமார் 150 தொகுதிகளுக்கு மட்டுமே ஓரளவு தகுதியான வேட்பாளர்கள் கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள இடங்களைக் கூட்டணிக் கட்சிகளிடம் ஒப்படைக்கலாம் என்ற நம்பிக்கையில் கட்சி உள்ளது.
ஆனால், வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் தாமதமும் குழப்பமும் தவெக தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
