அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தற்போது விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகள் சீரமைப்பு குறித்து புதியதோர் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை மறு சீரமைப்பு செய்யப்படும் என்பதை தொடர்ந்து முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என சொன்னது ஒன்றிய அரசாங்கம். அதை செய்த எங்களுக்கு மட்டும் ஏன் தண்டனை என்ற கேள்வி எழுகின்றது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அரசு திட்டங்கள் மூலமாக முன்னேறி இருக்கிறோம்.

தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வந்துள்ளது. இதற்கு நம்முடைய பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால் அது தண்டனை அல்லவா? தமிழகத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு நடந்தால் நமது குரல் நெறிக்கப்படும். தமிழ்நாட்டிற்கு குறையாது மற்ற மாநிலங்களுக்கு தொகுதிகள் கூடினாலும் அது பிரச்சனை தான். தமிழ்நாட்டு உணர்வுக்கு எதிரான போக்கு பாஜகவிற்கு இருக்கிறது. ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே இந்தியா என்ற கருத்து தமிழ்நாட்டிற்கு மாநிலங்களுக்கும் எதிரான அரசியல் போக்கு தான். இவ்வாறான அரசியலை பாஜக வைத்துக்கொண்டு நாங்கள் தனியாக இருக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்? பாஜக எதையுமே வெளிப்படையாக சொல்லவில்லை. அவர்கள் அரசியல் நேர்மையற்றவர்கள். அதனால்தான் பாஜகவை நம்ப முடியாது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.