தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மாலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம், அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு வேலைக்காக சென்றிருந்த இளைஞர் ஒருவர், சொந்த ஊருக்கு வந்தும் இரண்டு மணி நேரத்திலேயே லாரி மோதி உயிரிழந்தார் என்பது அதிக வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த கௌதமன் (27), சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தவர். விடுமுறையை தொடர்ந்து திங்கள்கிழமை  இரவு 7 மணியளவில் சொந்த ஊருக்கு வந்தார். பிறகு, இரவு 9 மணியளவில் தந்தை ரவிச்சந்திரனை பார்க்க இரண்டாம்புளிக்காடு கடைவீதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

இந்தநிலையில், பத்துக்காடு முக்கம் அருகே சென்றபோது, சேதுபாவாசத்திரத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கௌதமனின் பைக்கை மோதியது. மோதி பெரும் வேகத்தில் ஏற்பட்ட அந்த விபத்தில் கௌதமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். கௌதமனுக்கு சுபஸ்ரீ (23) என்ற மனைவி உள்ளார். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இளைஞரின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது கிராம மக்களையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சமத்துவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடிலிருந்து திரும்பிய சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த இந்த துயர சம்பவம், ஊரில் பெரும் அதிர்ச்சியையும், பேரதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது