2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் மோசமான ஆட்டத்தால் வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது புதிய ஒழுக்கக் கேடு புகாரில் சிக்கி சர்வதேச அளவில் தலைகுனிவைச் சந்தித்துள்ளது.

இலங்கையின் கண்டியில் நடைபெற்ற சூப்பர்-8 சுற்று ஆட்டங்களின் போது, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘டெலிகாம் ஏசியா ஸ்போர்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர்-8 போட்டிக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த வீரர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் மற்ற ஊழியர்களின் உதவியை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகம் தலையிட்டு, பாகிஸ்தான் அணி மேலாளர் நவீத் சீமாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது.

இந்த விவகாரத்தில் ஹோட்டல் நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டது. இருப்பினும், பாகிஸ்தான் அணி நிர்வாகம் இது ஒரு ‘உள்நாட்டு விவகாரம்’ என்று கூறி தலையிட்டது. மேலாளர் நவீத் சீமா ஹோட்டல் ஊழியரிடம் மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட வீரருக்குக் கடுமையான அபராதமும் விதித்துள்ளார்.

தவறிழைத்த வீரரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், அந்த வீரருக்கு ‘காரணம் கேட்கும் நோட்டீஸ்’ அனுப்பப்படலாம் என்றும், எதிர்காலப் போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைதானத்தில் சொதப்பிய பாகிஸ்தான் அணி, சூப்பர்-8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. மேலும் இக்கட்டான இந்தச் சூழலில், வீரரின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மெத்தனமான போக்கையே காட்டுவதாக விமர்சகர்கள் சாடி வருகின்றனர்.