இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிய மேற்கு இந்தியத் தீவுகள்  கிரிக்கெட் அணி, சர்வதேச வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக நாடு திரும்ப முடியாமல் கடந்த நான்கு நாட்களாக கொல்கத்தாவில் தவித்து வருகிறது.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, முக்கிய சர்வதேச வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, திட்டமிட்டபடி நாடு திரும்ப முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொல்கத்தாவிலேயே தங்கியுள்ளனர். இதேபோல் ஜிம்பாப்வே அணியும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட “நான் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்” (I just wanna go home) என்ற நான்கு வார்த்தை பதிவு, கிரிக்கெட் உலகைத் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடரிலிருந்து வெளியேறிய ஏமாற்றம் ஒருபுறம் இருந்தாலும், நீண்ட காலப் பயணத்திற்குப் பிறகு நிலவும் இந்த நிச்சயமற்ற சூழல் வீரர்களை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளது. சமி போன்ற ஒரு நிதானமான ஆளுமை இவ்வாறு பதிவிட்டது, நிலமையின் தீவிரத்தைப் புரியவைப்பதாக விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (CWI) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச வான்வழிப் போக்குவரத்து தடைகளால் அணியினரின் பயணம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஐசிசி (ICC) மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து மாற்றுப் பயண ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் உலகக்கோப்பை என்ற பிரம்மாண்ட தொடரின் முடிவில், கிரிக்கெட்டையும் தாண்டிய ஒரு சர்வதேச நெருக்கடியால் ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி தரைதட்டப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.