இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டால் அதற்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள் என நட்சத்திர வீரர் மொயீன் அலி எச்சரித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, ஐபிஎல் (IPL) அணிகளுடன் தொடர்புடைய நான்கு முக்கிய அணிகளான எம்.ஐ லண்டன் (MI London), மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் (Manchester Super Giants), சன்ரைசர்ஸ் லீட்ஸ் (Sunrisers Leeds) மற்றும் சதர்ன் பிரேவ் (Southern Brave) ஆகியவை பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அரசியல் சூழல் காரணமாக, ஐபிஎல் நிர்வாகங்களின் மறைமுகத் தடையை இந்த அணிகள் பின்பற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து டெலிகிராப் ஸ்போர்ட் (Telegraph Sport) இதழுக்கு மொயீன் அலி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இங்கிலாந்தில் இது போன்ற பாகுபாடுகள் நடக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டால், அது மிகப்பெரிய அவமானம். தென்னாப்பிரிக்கா (SA20) மற்றும் ஐக்கிய அரபு அமீரக (ILT20) லீக் தொடர்களில் இது போன்ற மறைமுகத் தடைகள் ஏற்கனவே உள்ளன. ஆனால், இங்கிலாந்தில் இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”

இந்த விவகாரத்தில் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணி கேப்டன் ஹாரி புரூக் மற்றும் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர். “ஒரு குறிப்பிட்ட நாட்டு வீரர்களை மட்டும் குறிவைத்து ஒதுக்குவது அப்பட்டமான பாகுபாடு. தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பல வீரர்கள் இது குறித்துப் பேசத் தயங்குகிறார்கள். ஆனால், என்னைப் போன்ற சீனியர் வீரர்கள் இது குறித்துப் பேசத் தயங்க மாட்டோம். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) இதனை உன்னிப்பாகக் கவனிக்கும் என நம்புகிறேன்,” என்று மொயீன் அலி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், வீரர்களைத் தேர்வு செய்வதில் பாகுபாடு காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இருப்பினும், திறமை மற்றும் உத்தியின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்யவில்லை என்று அணிகள் கூறினால், அது பாகுபாடுதான் என்பதை நிரூபிப்பது கடினம் என்றும் மொயீன் அலி ஒப்புக்கொண்டுள்ளார்.