ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே, அமெரிக்க டாலர்கள் மற்றும் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்களைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானவையா அல்லது கள்ள நோட்டுகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. எல்லையோரப் பகுதியில் இத்தகைய மர்மப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக ஒரு நாளைக்கு முன்புதான், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே ‘பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களில் ஆக்ராவிலும், இப்போது ஜம்மு எல்லையிலும் பாகிஸ்தான் தொடர்புடைய பலூன்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதால், இதன் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் குறித்துப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.