2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச அணி இந்தியா வர மறுத்ததால், அந்த அணி நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது.
அதன்படி, உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றாலும் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்தது. இந்த முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இதனால் பாகிஸ்தான் அணி புள்ளிகளையும் பெரும் வருவாயையும் இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த புறக்கணிப்பு முடிவைக் கிண்டல் செய்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாகிஸ்தான் அணியைப் “பயனற்ற அணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா உலகக்கோப்பையை நடத்தும்போது, இங்கு வந்து விளையாடமாட்டோம் எனச் சொல்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், “நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இங்கிருந்து வெளியேறுங்கள்” என மக்கள் ஆக்ரோஷமாகச் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே எல்லைப் பதற்றம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓவைசியின் இந்த காட்டமான கருத்து அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
