உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அரசு வேலை பெற்று பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பானோ பேகம் என்ற பெண், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து எடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது பாகிஸ்தான் குடியுரிமையை மறைத்து, போலி இந்திய ஆவணங்களைத் தயாரித்த அவர், அதன் அடிப்படையில் அங்கன்வாடி பணியாளராகவும், பின்னர் கிராம ஊராட்சிக் குழுவின் இடைக்காலத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.
இவரது குடியுரிமை குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முறையாக இந்தியக் குடியுரிமை பெறவில்லை என்பதும், நீண்ட கால விசாவிலேயே தங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசு அதிகாரிகளை ஏமாற்றி மோசடி செய்ததற்காக அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நடந்த இந்த முறைகேடு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதற்கு உதவிய உள்ளூர் அதிகாரிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
