உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் தற்போதைய நிலையை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கே. ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொழும்புவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான தோல்வி குறித்து தனது யூடியூப் தளத்தில் பேசிய ஸ்ரீகாந்த் தெரிவித்ததாவது:
பாகிஸ்தான் கிரிக்கெட் இவ்வளவு மோசமான நிலைக்குச் செல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களைத் தந்த நாட்டில், இன்று ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கூட இல்லை.
ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சில் முன்பிருந்த வேகம் இப்போது அறவே இல்லை.
பாபர் அசாம் தான் அந்த அணியின் முதன்மை பேட்ஸ்மேன் என்றால், அவர் டி20 கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட வேண்டும்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை இன்னும் ‘பெரிய போட்டி’என்று அழைப்பதில் அர்த்தமில்லை என்று குறிப்பிட்ட ஸ்ரீகாந்த், “உண்மையைச் சொல்லப்போனால், பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்தியாவின் முதன்மை அணி தேவையில்லை; இந்தியாவின் ‘சி’ (C) அணியை அனுப்பினாலே அவர்கள் பாகிஸ்தானைத் தோற்கடித்து விடுவார்கள். ஏன், இந்தியாவின் நான்காவது தரவரிசை அணி கூட அவர்களை எளிதாக வென்றுவிடும்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதைப் போல மிகவும் அலட்சியமாக இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப் போயுள்ளதாகவும், அந்த அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
