கொழும்புவில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து பாகிஸ்தான் பந்துவீச்சை நிலைகுலைத்தார். ஆனால், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இஷான் கிஷன் மைதானத்திலேயே விழுந்து வலியால் துடித்தார். பிசியோதெரபிஸ்ட்கள் வந்து சிகிச்சை அளித்தபோது, அங்கு ஓடி வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இஷான் கிஷானின் தலைக்கு அடியில் தனது துண்டை மடித்து ‘தலையணை’ போல வைத்தார்.

​அதுமட்டுமில்லாமல், கிஷானின் தலையில் இருந்த மண்ணைத் துடைத்துவிட்டு அவர் காட்டிய அந்தப் பாசமான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. “கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது தோழமையின் வெளிப்பாடு” என ரசிகர்கள் சிராஜைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். கிஷானின் இந்த அதிரடி ஆட்டம் மற்றும் பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாட்டால், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைப் பந்தாடி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.