பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையிலான 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பெரும் சர்ச்சையுடன் நடந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற முந்தைய போட்டியில் கைகுலுக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, அதன் தொடர்ச்சியாக அந்த போட்டிக்கான நடுவராக இருந்த ஆண்டி பைக்ராஃப்ட்டை மீதமுள்ள போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கோரியது. ஆனால், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த பைக்ராஃப்ட் மீது எந்தத் தவறும் இல்லை என ஐசிசி நிராகரித்ததால் பாகிஸ்தான் குழப்பத்தில் சிக்கியது.
புதன்கிழமை துபாயில் பாகிஸ்தான், யுஏஇ அணியை எதிர்கொண்டது. போட்டிக்கு முன்னதாகவே பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்துக்கு செல்ல வேண்டாம் என்று பிசிபி அறிவுறுத்தியது. பைக்ராஃப்ட் மைதானத்தில் தோன்றியதும், பாகிஸ்தான் அணி புறக்கணிப்பது உறுதி எனப்பட்டது.
எனினும், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணி விளையாட தீர்மானிக்கப்பட்டது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமானது. பாகிஸ்தான் களமிறங்காதிருந்தால், யுஏஇ அணி வாக் ஓவர் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.
டாஸில், யுஏஇ கேப்டன் முகமது வசீம் பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, “நான் எப்போதும் பேட்டிங் செய்ய விரும்புகிறேன், எனவே இந்த முடிவில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவூப் மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் பெற்றிருந்ததால், இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆனால், கைகுலுக்காத சர்ச்சை மற்றும் நடுவரை நீக்காத காரணத்தால், போட்டிக்கு முன்பே சர்ச்சைகள் சூழ்ந்தன.
