
துருக்கியின் அதிபர் எர்டோகனின் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் தற்போது அவரது குடும்பத்தையே நேரடியாக பாதித்துள்ளன. சமீபத்தில் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது.
இதனால் இரு நாடுகளுக்கிடையே தூரம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, எர்டோகனின் மகள் சுமேயே பைரக்தரின் பெயரில் செயல்பட்டுவரும் Celebi Airport Services India Ltd நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோவா, அகமதாபாத், கொச்சி மற்றும் கான்பூர் போன்ற ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் தரைவழி கையாளுதல், விமானம் இயக்கம் மற்றும் சரக்கு சார்ந்த முக்கிய பணிகளைச் செய்து வந்தது.

இப்போது, சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) மூலம் அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த நிறுவனம் இந்தியாவில் எந்தவொரு பாதுகாப்பு தொடர்பான பணியையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
BCAS இணை இயக்குநர் சுனில் யாதவ் வெளியிட்ட உத்தரவின் மூலம் இந்த நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, செலிபி நிறுவனம் மறுமொழியாக, துருக்கிய அரசுடன் தங்களை எதுவும் தொடர்புபடுத்த முடியாது என்றும், தங்கள் நிறுவன பங்குகளில் 65% முதலீடு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இடங்களில் இருந்து வந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவரில் இளைய மகளான சுமேயே, அரசியல் அறிவியல் படித்தவர் மற்றும் துருக்கிய அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் வணிகத்திலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்துள்ளார். இதனால், அவரது நிறுவனத்தை இந்தியா தடை செய்துள்ள நிலையில், இது துருக்கியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு நேரடியான பதிலடி என கருதப்படுகிறது. சம்பவம் இந்திய-துருக்கிய உறவுகளில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.