பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் க்வாடர் மாவட்டத்தில் உள்ள கல்மத் பகுதியில் பயணிகள் பேருந்தை நிறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களை அடையாள ஆவணங்களைக் காண்பித்த பின்னர், அடையாளம் கண்டு அவர்களை வெளியே இழுத்து சுட்டுக்கொன்றனர். இதில் ஐந்து பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மொத்தமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மூன்று பேர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை எதுவும் குழு பொறுப்பேற்கவில்லை என்றாலும், இத்தகைய தாக்குதல்கள் முன்னதாக பஞ்சாப் மக்களை இலக்காகக் கொண்டு பலோசிஸ்தான் இனக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளன. இந்த கொடூர தாக்குதலை பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் மற்றும் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி கடுமையாக கண்டித்து, தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

பலோசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்தி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு  பயங்கரவாதிகளின் நடமாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டு 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர், பலோசிஸ்தானில் பதற்ற நிலை மேலோங்கியுள்ளது. இந்த மாகாணம், பாதுகாப்பு படைகள், பொது மக்கள் மற்றும் சீன-பாக் பொருளாதார பாதை திட்டங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்கப்படுகின்ற ஒரு வன்முறையான பகுதி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.