உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் எச்.ஐ.வி. தொற்றுநோய்களில் ஒன்றை பாகிஸ்தான் தற்போது எதிர்கொள்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில், புதிய எச்.ஐ.வி. தொற்றுகளின் எண்ணிக்கை 200% அதிகரித்து, 2010-ல் 16,000 ஆக இருந்தது, 2024-ல் 48,000 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்பற்ற ஊசி நடைமுறைகள், இரத்த மேலாண்மை குறைபாடுகள், மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சுமார் 350,000 பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவர்களில் கிட்டத்தட்ட 80% பேர் தங்கள் நிலையைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். மேலும், குழந்தைகளிடையே புதிய தொற்றுகள் அதிகரித்து வருகின்றன (2010-ல் 530 ஆக இருந்தது, 2023-ல் 1,800 ஆக உயர்ந்துள்ளது).
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்கச் சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்களில் வெறும் 14% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என்றும், எச்.ஐ.வி.யுடன் வாழும் 0-14 வயதுக் குழந்தைகளில் 38% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் WHO தெரிவித்துள்ளது. எய்ட்ஸை ஒழிக்கக் கூட்டு முயற்சி தேவை என்று WHO வலியுறுத்தியுள்ளது.
