
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக இந்தியா வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு சிந்து, ஷெனாப் உள்ளிட்ட நதி நீரையும் நிறுத்தியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ததோடு எல்லையில் வீரர்களை குவித்து வைத்து தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதற்கு அவ்வப்போது இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று மத்திய அரசாங்கம் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 244 இடங்களில் இந்த போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதாவது போர் நடந்தால் மக்களை பாதுகாப்பது தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாககுறிப்பாக வான்வெளி தாக்குதல் நடந்தால் அதனை எச்சரிக்கும் வகையில் சைரன் ஒலிக்க வேண்டும்.
அதன் பிறகு போர்க்காலங்களில் திடீர் மின்தடை, போக்குவரத்து துண்டிப்பு மற்றும் செல்போன் சிக்னல்கள் நிறுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அவசர காலநிலையை ஏற்படுத்தி அதிலிருந்து மக்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு இடங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி சென்னை கல்பாக்கம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது. நாட்டில் கடைசியாக கடந்த 1971 ஆம் ஆண்டு போர்க்கால ஒத்திகை நிகழ்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. மேலும் இதன் காரணமாக பாகிஸ்தானுடன் போர் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.