மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள பி.எம்.ஸ்ரீ மகாராணி லட்சுமிபாய் பெண்கள் பள்ளியில், வகுப்பறை நடந்து கொண்டிருந்த வேளையில், கூரையின் பிளாஸ்டர் திடீரென விழுந்ததால், இரு மாணவிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சனிக்கிழமை வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் நடைபெற்றது வெள்ளிக்கிழமை பர்கேடா பகுதியில் உள்ள அரசு பிரதமர் ஸ்ரீ பள்ளியில் ஆகும்.

வீடியோவில், வகுப்பு நடைபெறும்போது ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அச்சமயம், முன் வரிசையில் அமர்ந்திருந்த இரு மாணவிகள் மீது கூரையின் பிளாஸ்டர் நேரடியாக விழுந்தது. இதனால் மாணவிகள் தங்கள் தலையில் காயம் அடைந்தனர். பிளாஸ்டர் விழுந்ததும் வகுப்பறையில் சலசலப்பும் குழப்பமும் ஏற்பட்டது. ஆசிரியர் மற்றும் மாணவிகள் அனைவரும் பதற்றத்துடன் வெளியில் ஓடுவதை காண முடிகிறது. இந்த நிகழ்வில் ஆசிரியர் உட்பட மேலும் சில மாணவிகளும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரி என்.கே. அஹிர்வார் கூறியதாவது: “மழை காரணமாக வகுப்பறைகளில் ஈரப்பதம் நிலவி வந்ததைப்பற்றி பள்ளி நிர்வாகம் முன்பே புகார் அளித்திருந்தது. பின்னர் சில வகுப்பறைகளில் பழுது பார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இன்னும் சில வகுப்புகள் பழுதான அறைகளிலேயே நடத்தப்பட்டுவந்தன. இது போன்ற இடர்களை தவிர்க்க, பழுதான வகுப்பறைகளை உடனடியாக சீரமைக்க பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பள்ளியின் மேலாளர் கூறியதாவது, “மழை காலத்திலிருந்து பள்ளி முழுவதும் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதையடுத்து நாங்கள் ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்தோம். ஆனால் இன்னும் அனைத்து வகுப்பறைகளிலும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென்பதால் நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.