தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்களும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாய் ஊக்கத்தொகையும், 10ம் வகுப்பு முதல் பரிசு ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 500 ரூபாயும், மூன்றாம் பரிசுக்கு 300 ரூபாயும் ஊக்க தொகையாக வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் பயன்பெற தமிழகத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ள மாணவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.