நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காதபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து அவர் கூறியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் 19 வயது வரை உள்ள 5,18,438 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1,53,830 பேருக்கும் குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இந்த மாத்திரைகள் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இந்த மாத்திரையின் மூலமாக குடற்புழுவினால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. அதனால் குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர முடியும். அதிலும் குறிப்பாக இரத்த சோகை குறைபாடு போன்ற பாதிப்புகள் இந்த மாத்திரையின் மூலமாக தடுக்கப்படுகிறது. தேசிய குடற்புழு நீக்க திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் இரண்டு தவணைகளாக முகாம் நடத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.