
தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றும் தமிழ்நாட்டில் எப்போதுமே இரு மொழி கல்வி கொள்கை மட்டும் தான் பின்பற்றப்படும் என்றும் அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. அதன் பிறகு ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் பாஜகவினர் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கல்விக் கொள்கை பின்பற்றப்படுவதாகவும் அரசு பள்ளிகளில் மட்டும் தான் இரு மொழி கல்வி கொள்கை இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் என்பது நிலவும் நிலையில் அண்ணாமலை அவ்வப்போது பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அண்ணாமலை ஒரு விதண்டாவாதமான அரசியலை செய்கிறார். அவர் கர்நாடகாவில் இருந்தால் கன்னடன் என்றும் தமிழ்நாட்டில் இருந்தால் தமிழன் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தால் இந்து என்றும் கூறுவார். அவர் பல வேஷம் போடக் கூடியவர். மேலும் அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் யாருமே முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.