உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தை கொலை வழக்கு தொடர்பாக வெளிவந்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. மனைவியின் உறவு குறித்து ஏற்பட்ட சந்தேகத்தில், தனது சொந்த மகனையே கொலை செய்து, அதை மனைவியின் காதலர் மீது  பழி சுமத்த தேவையென நினைத்த தந்தை, போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி, பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு ஒரு திருமண ஊர்வலம் வந்தது. குழந்தையுடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக முதலில் கூறிய பாபுலால், தனது இளைய மகன் ஊர்வலத்திற்குச் சென்றதாகக் கூறி தேடிச் சென்றார் என்பதும், பின்னர் அவர் காணாமல் போனதாக பொய்யான தகவல் பரப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் உண்மை வேறு. விசாரணையில் போலீசாரிடம் பாபுலால் ஒப்புக்கொண்டது பின்வருமாறு:
“குழந்தையை ஒரு ஒதுக்குப்புறத்திற்குக் கொண்டு சென்றேன். முதலில் கைகளால் அடித்தேன். மயங்கியவுடன் உதைத்து தரையில் வீழ்த்தினேன். பின்னர் காலணியால் முகத்தில் பலமுறை அடித்தேன். அதன் பிறகு, திருமண ஊர்வலத்திற்கு திரும்பிச் சென்று குழந்தை காணவில்லை என்று நாடகம் ஆடினேன்,” என்று அவர் ஒப்புக்கொண்டார். டிசம்பர் 1ஆம் தேதி, கிராமத்திற்கு அருகிலுள்ள கடுகு வயலில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் தாத்தா புகார் கொடுத்தார்.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, பாபுலால் தனது வாக்குமூலத்தை பலமுறை மாற்றியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, பாபுலால் பின்புற சுவரை உடைத்து தப்பி ஓடியதும் சந்தேகத்தை மேலும் உறுதி செய்தது. சிறப்பு போலீஸ் குழுக்கள் தொடர்ந்து தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

அந்த விசாரணையில், “11 ஆண்டுகளாக திருமணம் செய்து வாழ்ந்தோம். சில ஆண்டுகளாக மனைவி கிராமத்தில் உள்ள சில ஆண்களுடன் தொடர்பு கொண்டார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு  ஒரு இளைஞனுடன் பேசுவதை கண்டேன். நவம்பர் 24ஆம் தேதி ஏற்பட்ட சண்டையால் மனைவி குழந்தைகளை விட்டு தாய் வீட்டிற்கு சென்றாள். அந்த இளைஞனுடன் வாழப் போவாள் என நினைத்தேன். பழி  வாங்க, என் மகனைக் கொலை செய்யத் திட்டமிட்டேன்,” என்று பாபுலால் ஒப்புக்கொண்டார். மேலும்  இந்த கொடூர சம்பவம், உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.