சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ஒரு தங்குமிடத்தில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்திய போது, 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கே.கே. நகரைச் சேர்ந்த அந்த மாணவியை வாடிக்கையாளர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆந்திரத்தைச் சேர்ந்த துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணையில் மாணவியின் தந்தை மரணமடைந்த பின்னர், அவரது தாய் மறுமணம் செய்து விட்டதாகவும், மாணவி தாயின் தோழியான பூங்கொடி என்ற கிளப் டான்சரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்தது. ஆதரவின்றி இருந்த மாணவியை பூங்கொடி ஆசை வார்த்தைகளால் கவர்ந்து விபசாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. பணமும், பொருளும், சொகுசு வாழ்க்கையும் மாணவியை இந்த பாதையில் இழுத்ததாக தெரிகிறது. இதில், மாணவியின் பெரியம்மா மகளான ஐஸ்வர்யாவும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் மாணவியை  பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், திரைப்பட இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன், வசதியுள்ள வாடிக்கையாளர்களை மாணவியுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை சினிமா வட்டாரத்தில் உள்ள பலரிடம் “விருந்தாக்கிய” விவரம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பூங்கொடி, ஐஸ்வர்யா மற்றும் பாரதி கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகி ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான அனைவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவி தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்தும், தமக்கு நேர்ந்த அனுபவங்களை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், போலீசார் மேற்கொண்ட சோதனைக்குப் பின் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களின் செல்போன் விவரங்களை வைத்து தொடர்பில் இருந்த மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.