கேரள மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசிந்திரனின் அக்காள் மகளாகும் ஸ்ரீலேகா (வயது 68), அவரது கணவர் பிரேமராஜன் (76) ஆகிய இருவரும் கண்ணூரில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்ற ஓட்டல் மேலாளரான பிரேமராஜனுக்கும் ஸ்ரீலேகாவுக்கும் பிரபித், சிபின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம்  சிபின் கண்ணூர் விமான நிலையம் வருவதாக கூறப்பட்ட நிலையில், அவரை அழைத்து வருவதற்காக டிரைவர் சரோஷ் வீட்டிற்கு சென்றார்.

ஆனால், கதவை திறக்க யாரும் பதிலளிக்கவில்லை என்பதால் அக்கம்பக்கத்தவரின் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது, ஸ்ரீலேகா தலையில் காயம் அடைந்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் பிரேமராஜனும் உடல் கருகிய நிலையில் சடலமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்ததும் கண்ணூர் மாநகர காவல் ஆணையர் நிதின்ராஜ் தலைமையில் வளப்பட்டணம் போலீசார், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்ரீலேகாவை பிரேமராஜன் அடித்து கொலை செய்த பின்பு, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தொடக்க விசாரணையில் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மட்டுமே மரணத்திற்கான காரணம் உறுதியாக தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இயற்கை அல்லாத மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.