ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பெத்தபொயபள்ளியைச் சேர்ந்த புத்தா வெங்கடேஸ்வர் (வயது 36) என்பவரும் அவரது மனைவி தீபிகாவும் தங்களது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர். தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த வெங்கடேஸ்வர், தற்கொலை செய்வதற்கு முன் தனது குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

மாலையில் பள்ளி முடிந்ததும், மோக்சிதா (8), ரகுவர்ஷினி (6), சிவதர்மா (4) ஆகிய மூன்று குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற அவர், தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹாஜிபூர் பகுதியில் பெட்ரோல் ஊற்றி குழந்தைகளுக்கு தீ வைத்து கொன்று, பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர்கள் வீடு திரும்பாததை அறிந்த மனைவி தீபிகா, பல இடங்களில் தேடியும் அவர்களை காணவில்லை. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமரா படங்களை ஆய்வு செய்ததில் கொடூர சம்பவம் அம்பலமானது. குழந்தைகள் உடலையும், வெங்கடேஸ்வரின் உடலையும் மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.