உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் நேற்று  காலை நேரத்தில் நடந்த துயரமான சாலை விபத்தில் 9 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள் ராஜஸ்தானுக்கு பயணம் செய்து கொண்டிருந்த டிராக்டர்-டிராலி மீது பின்புறம் வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. மோதிய வேகத்தில்  டிராலி கவிழ்ந்தது. சம்பவத்தின் போது, அந்த டிராக்டரில் மொத்தம் 61 பேர் இருந்தனர். இந்நிலையில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை போலீசார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து அறிந்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோக நிகழ்வு, உ.பி.யின் சாலை பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.