தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 234 தொகுதிகளுக்கான 72 தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் நியமித்தார்.
இதில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குச் சிங்காநல்லூர், மதுரை தெற்கு உள்ளிட்ட 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையை இவ்வளவு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கியது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது உள்கட்சிப் பூசலின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டாலும், இதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என அண்ணாமலை என்னிடம் நேரில் விளக்கம் அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அதிமுக-வுடனான கூட்டணி மற்றும் நிர்வாகிகள் நீக்கம் போன்ற விவகாரங்களில் நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடே இந்த விலகலுக்கு உண்மையான காரணம் என அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
