இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்ட கூட்டம் தற்போது பெருகி வருகிறது. இதில் ஆண்களுடன் பெண்களும் தற்போது இணைந்துள்ளனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்மணி, முழு மாத கர்ப்பிணியாக (9 மாத கர்ப்பிணி) இருந்துகொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் காட்சி காண்போரை பதற வைத்துள்ளது. அந்த வீடியோவில், முழு கர்ப்பிணியாக இருக்கும் அந்தப் பெண்மணி, தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு கைகளையும் மேல்நோக்கி நீட்டி, ஹேண்டில்பாரைப் பிடிக்காமல், வாகனத்தின் இருக்கையில் ஏறி நின்று பயணம் செய்கிறார்.

இந்த ஆபத்தான காட்சிகளைப் பார்த்த நெட்டிசனன்கள், அவரைப் பாராட்டிய அதே வேளையில் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளனர். “நீங்கள் சாகசம் செய்வதில் திறமைசாலிதான், அதற்காகப் பாராட்டுகள். ஆனால், இந்தக் கர்ப்பிணி நிலையில் இது உங்களுடைய குழந்தையை ஆபத்தில் தவிக்கவிடும் செயல். தயவுசெய்து இதுபோன்ற ஆபத்தான செயல்களில் இனி ஈடுபடாதீர்கள்” என்று பலரும் கவலையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தாயாக, பொறுப்பற்ற வகையில் உயிரை பணயம் வைக்கும் இவரது செயல் குறித்து இணையத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளதுடன், இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.